ஹாங்சோ : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தற்போது பயிற்சி செய்து வரும் நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ருதுராஜ் தலைமையிலான இரண்டாம் நிலை இந்திய அணி தற்போது சீனாவில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி ஆடவர் கிரிக்கெட் பிரிவில் நாளை கால் இறுதியில் நேபாளை எதிர்கொள்கிறது. இதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முதல் முறையாக தற்போது கேப்டனாக பதவி ஏற்றுள்ள அவர் தாம் தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தோனியின் கேப்டன்சி ஸ்டைலை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவருடைய செயல்பாடும் வித்தியாசமாக இருக்கும்.
அதே போல் என்னுடைய செயல்பாடு மிகவும் வித்தியாசமானது. இதனால் தோனியை போல் காப்பி அடிக்காமல் என்னுடைய ஸ்டைலை தான் நான் பின்பற்றுவேன். தோனி இந்த தருணத்தில் என்ன செய்வார் என்பது குறித்து யோசிக்க மாட்டேன். அதே சமயம் நெருக்கடியான சமயத்தில் தோனி எந்த விஷயங்களை செய்வார் என்பது குறித்து யோசித்து அதை நாம் பின்பற்றுவதில் தவறில்லை.
குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுவார்? குறிப்பிட்ட வீரரை அவர் எவ்வாறு போட்டியிடும் போது கையாள்வார் என்பது குறித்து நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். எனினும் என் மனதிற்கு எப்படி தோன்றுகிறதோ அதை போல் தான் நான் கேப்டனாக செயல்படுவேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் என்று அந்த மேடையில் அனைவரும் அணிக்காக நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவாக இருக்கிறது. நாங்கள் நேற்று விளையாட்டு கிராமத்திற்கு சென்று வீரர்களை சந்தித்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை கண்டு கொண்டோம்.
மைதானத்தின் அளவு குறித்து பல கேள்விகளை பலரும் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் அடிமட்டத்திலிருந்து வரும்போது இதை போன்ற மைதானங்களில் விளையாடி தான் தற்போது சர்வதேச அளவுக்கு வந்திருக்கிறோம். எனவே இது போன்ற சிறிய மைதானத்தில் அனைவரும் விளையாடி பழகிய ஒன்றுதான் என ருதுராஜ் கூறியுள்ளார்.