வதோதரா: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்கோர் போர்டை பார்க்கும்போது இது சாதாரண வெற்றியாகத் தெரிந்தாலும், கடைசி நேரத்தில் களத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடி குறித்து கே.எல். ராகுல் போட்டி முடிந்த பின் மனம் திறந்துள்ளார். வெற்றியின் பின்னணியில் இருந்த அந்த பரபரப்பான நிமிடங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவித்தது. 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடியது. முன்னதாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, தனது 5-வது ஓவரை வீசி முடித்த வாஷிங்டன் சுந்தர், முதுகு வலி காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் இந்தியா பேட்டிங் செய்தபோது, கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் விழவே, சுந்தர் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு களமிறங்கினார். இது குறித்துப் பேசிய ராகுல், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வாஷிங்டன் சுந்தரால் ஓட முடியாது என்ற விஷயம் அவர் கிரீஸுக்கு வரும் வரை எனக்குத் தெரியாது. அவர் களத்திற்கு வந்த பிறகுதான், அவரால் வேகமாக ஓடி ரன் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தேன். அந்த நொடி நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்" என்று கூறினார்.
ஒருவேளை கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றிருந்தால், ஓடி ரன் எடுக்க முடியாத சூழல் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவித்திருக்கும். "சுந்தரால் ஓட முடியாது என்பதால், எங்களின் திட்டத்தை உடனடியாக மாற்றினோம். ஒவ்வொரு ரன்னையும் கவனமாக எடுக்க வேண்டியிருந்தது. இரண்டு ரன்கள் ஓட வேண்டிய இடத்தில் ஒன்றோடு திருப்திப்பட்டுக் கொண்டோம். முக்கியமாக 'டாட் பால்' ஆகாமல் பார்த்துக் கொள்வதே எங்கள் குறியாக இருந்தது. நல்லவேளையாக சுந்தர் பந்தை நன்றாக டைமிங் செய்தார்" என்று ராகுல் விளக்கினார்.
ஆடுகளம் குறித்துப் பேசிய ராகுல், "100 ஓவர்களுமே பிட்ச் ஒரே மாதிரிதான் செயல்பட்டது. ஆனால் புதிய பந்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. ரோகித், கில் மற்றும் விராட் கோலி அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நேரம் செல்லச் செல்ல பந்து பேட்டிற்கு வருவது சற்று மெதுவானது. அதுவும் சுந்தரால் ஓட முடியாத சூழலில், கடைசி நேரத்தில் ஆட்டம் இன்னும் சவாலாக மாறியது" என்றார்.
மேலும் பேசிய அவர், "நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் என்றாலே கடைசி ஓவர் வரை த்ரில்லராகத் தான் இருக்கும். அவர்கள் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எப்போதெல்லாம் ஆட்டம் நம் கைவிட்டுப் போவது போல் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மீண்டும் உள்ளே வருவார்கள். இந்த வெற்றியால் நிம்மதி அடைந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். வாஷிங்டன் சுந்தரின் காயத்தையும் மீறிய அந்தப் போராட்டம் இந்திய ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.