நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்த்தது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தனது முடிவை எண்ணி வருந்தும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மைதானத்தில் வானவேடிக்கை காட்டினர்.
குறிப்பாக கடைசி நேரத்தில் ரிங்கு சிங் காட்டிய அதிரடியால் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டியது. மேலும், ரிங்கு சிங் கடைசி 2 ஓவர்களில் அதிக ரன் குவிப்பதில் மிரள வைக்கும் சாதனையை செய்தார். இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் அவர் 20 ரன் குவித்தார்.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் புரட்டி எடுத்தார். வெறும் 35 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 84 ரன்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 8 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். 240 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடிய ஆட்டம் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் எடுத்துத் தங்கள் பங்கை அளித்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், ஃபினிஷிங் செய்ய நான் இருக்கிறேன் என களமிறங்கினார் ரிங்கு சிங். வழக்கம் போல கடைசி ஓவர்களில் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எங்குப் பந்து வீசினாலும் அதை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார்.
வெறும் 20 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங், 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்குத் துணையாக அர்ஷ்தீப் சிங் கடைசி நேரத்தில் 6 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
ரிங்கு சிங் ஏன் உலகின் சிறந்த ஃபினிஷராக உருவெடுத்து வருகிறார் என்பதற்கு ஒரு மிரட்டலான புள்ளிவிவரம் சாட்சியாக உள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் 19 மற்றும் 20வது ஓவர்களில் மட்டும் ரிங்கு சிங் இதுவரை 74 பந்துகளைச் சந்தித்துள்ளார். அதில் அவர் குவித்த ரன்கள் 213 ஆகும்.
கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் அவரது ஸ்டிரைக் ரேட் 287.83 ஆக உள்ளது. இதில் 14 பவுண்டரிகளும், 22 சிக்ஸர்களும் அடங்கும். தனது சர்வதேச டி20 கரியரில் அவர் அடித்த மொத்த ரன்களில் 35.8 சதவீத ரன்கள் இந்த கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மட்டுமே ஓரளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்திய வீரர்களின் அதிரடியில் சிக்கித் தவித்தனர். கைல் ஜேமிசன் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார்.