இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியின் தேர்வு முறை குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்ட அர்ஷ்தீப் சிங்கைக் ஓரங்கட்டிவிட்டு, பிரசித் கிருஷ்ணாவிற்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது ஏன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாளை (ஞாயிறு) இந்தூரில் தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், கைஃப்பின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் கில்லை நோக்கி கேள்விகளை முன்வைத்தார்.

"நீங்கள் அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு விக்கெட்-டேக்கரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, பிரசித் கிருஷ்ணாவை வளர்க்கப் பார்க்கிறீர்கள். ஆனால் பிரசித் கிருஷ்ணா ஒன்றிரண்டு போட்டிகளைத் தவிர, மற்ற எல்லா போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்குகிறார். அவர் மிகவும் காஸ்ட்லியான பவுலராக இருக்கிறார். ஒரு பக்கம் விக்கெட் எடுக்கும் பவுலரை வெளியே உட்கார வைத்துவிட்டு, இப்படி ரன் கொடுப்பவரை அணியில் வைப்பது என்ன நியாயம்?" என்று கைஃப் விளாசியுள்ளார்.
உலகக்கோப்பை ஜெயிக்கணும்னா இதை மாத்துங்க:
இரண்டாவது போட்டியில் இந்தியா 284 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தது குறித்துப் பேசிய அவர், "280 ரன்கள் குறைவான ஸ்கோர், அதனால்தான் தோற்றோம் என்று யாராவது சொன்னால், இந்த அணி 2027 உலகக்கோப்பையை வெல்லும் என்று நான் நம்பவில்லை.
எல்லா நாளும் 350 அடிக்க முடியாது. சில நாட்களில் ஸ்கோர் குறைவாகத்தான் வரும். 270-280 ரன்களை வைத்துக்கொண்டு எப்படி எதிரணியைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறுவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சு மூலம் வெற்றி பெறத் தெரிந்தால் தான் உலகக்கோப்பை கனவு பலிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
போட்டிக்குப் பின் பனிப்பொழிவு காரணமாகப் பந்துவீச முடியவில்லை என்று கூறுவதை கைஃப் ஏற்றுக்கொள்ளவில்லை. "எப்போதும் பனிப்பொழிவு இருக்கத்தான் செய்யும். அதைக் காரணமாகச் சொல்லாதீர்கள். பனிப்பொழிவிலும் எப்படித் திறமையாகப் பந்துவீசுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடுங்கள்" என்று அறிவுரை கூறி இருக்கிறார்.
நாளை போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானம் இந்தியாவிற்கு மிகவும் ராசியான மைதானம். இங்கு இதுவரை இந்தியா விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது (5-0). இருப்பினும், நாளைய போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது மீண்டும் பிரசித் கிருஷ்ணாவே தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.