இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோரின் மிரட்டலான சதத்தால் நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் இந்தூரில் ரன் மழை பொழிந்தது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஹென்றி நிக்கோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த டெவோன் கான்வே 5 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த வில் யங் 30 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 58 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, நேரம் செல்ல செல்ல இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 219 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர்.
சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் குவித்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தூணாக நின்ற டாரில் மிட்செல், 131 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மிட்செல் மற்றும் பிலிப்ஸ் விக்கெட்டுக்கு பிறகு வந்த விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே (2), ஃபால்க்ஸ் (10) ஆகியோர் நிலைக்கவில்லை. ஆனால் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். அவர் 18 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் விளாச, கிறிஸ்டியன் கிளார்க் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 84 ரன்களை வாரி வழங்கினார். முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.