இந்தூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக டாரில் மிட்செல் இந்தத் தொடரில் மட்டும் 352 ரன்கள் குவித்து புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் நியூசிலாந்து முன்னிலை பேட்டர்கள் திணறினர். ஹென்றி நிக்கோல்ஸ் டக் அவுட் ஆக, அதிரடி வீரர் டெவோன் கான்வே 5 ரன்களில் ஹர்ஷித் ராணாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நன்கு செட்டிலாவார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 30 ரன்களில் வெளியேற, நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 58 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இந்திய அணி எளிதாக ஆட்டத்தை முடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினர். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, நேரம் செல்ல செல்ல இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
குறிப்பாக டாரில் மிட்செல் கிளாசிக்கான ஷாட்களை ஆட, கிளென் பிலிப்ஸ் தனது வழக்கமான பாணியில் அதிரடி காட்டினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 219 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர்.
சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் குவித்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தூணாக நின்ற டாரில் மிட்செல், 131 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இந்தத் தொடர் முழுவதும் டாரில் மிட்செல் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மட்டும் மிட்செல் மொத்தம் 352 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டாரில் மிட்செல் பெற்றுள்ளார்.
145* - டாம் லேதம், ஆக்லாந்து (2022)
140 - மைக்கேல் பிரேஸ்வெல், ஹைதராபாத் (2023)
138 - டெவோன் கான்வே, இந்தூர் (2023)
137 - டாரில் மிட்செல், இந்தூர் (2026) (இன்றைய போட்டி)*
134 - டாரில் மிட்செல், வான்கடே (2023)
131* - டாரில் மிட்செல், ராஜ்கோட் (2026)
130 - டாரில் மிட்செல், தர்மசாலா (2023)
இந்தப் பட்டியலில் டாரில் மிட்செலின் பெயர் மட்டும் 4 முறை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இந்திய பந்துவீச்சை எவ்வளவு சிறப்பாக கையாளுகிறார் என்பதற்கு இதுவே சாட்சி.
மிட்செல் மற்றும் பிலிப்ஸ் விக்கெட்டுக்கு பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இந்திய அணிக்கு 338 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.