சென்னை: இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல். இந்நிலையில், இவ்வளவு திறமையான ஒரு வீரரை எந்த ஐபிஎல் அணியும் 2026 சீசனுக்காகத் தேர்வு செய்யாதது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக விலகியதால், ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு மைக்கேல் பிரேஸ்வெல்லிடம் ஒப்படைக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று கொடுத்துள்ளார் பிரேஸ்வெல்.

குறிப்பாக இந்தூரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், கடைசி நேரத்தில் களமிறங்கிய பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடினார். அவர் 18 பந்தில்அடித்த 28 ரன்கள் தான், நியூசிலாந்து அணியின் ஸ்கோரை 300-ல் இருந்து 337-க்கு உயர்த்தியது. அதுவே வெற்றியையும் தீர்மானித்தது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், ஐபிஎல் அணிகளின் தேர்வு முறையை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, "மைக்கேல் பிரேஸ்வெல் சிக்ஸர்களை எவ்வளவு சாதாரணமாக அடிக்கிறார் என்று பார்த்தீர்களா? நியூசிலாந்து அணி 330 ரன்களைக் கடக்க அவரே முக்கியக் காரணம்.
ஆனால், இப்படிப்பட்ட ஒரு வீரரை எந்த ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது. அவருக்குப் பந்துவீச முடியாத காயம் இருக்கலாம், ஆனால் ஒரு பேட்டராகவும், கேப்டனாகவும் அவர் ஜொலிக்கிறார். ஐபிஎல் அணிகள் உண்மையில் எந்த அடிப்படையில் தான் வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை" என்று ஸ்ரீகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்ட கிளென் பிலிப்ஸ் மற்றும் டாரில் மிட்செல் ஆகியோரையும் ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டினார். "ஹாட்ஸ் ஆஃப் நியூசிலாந்து! 5/2 என்ற நிலையில் இருந்து மீண்டு வந்து 337 ரன்கள் குவிப்பது சாதாரண விஷயமல்ல. கிளென் பிலிப்ஸ் ஆடிய விதத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன். அவர் அடித்த ஸ்ட்ரைட் சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் தரம். தட்டையான பிட்சாக இருந்தாலும், பிலிப்ஸ் மற்றும் மிட்செல் ஆடிய விதம் வேற லெவல்" என்று ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டினார்.