கவுஹாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இமால வெற்றி பெற்றது. 154 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நான்கு பெரிய சாதனைகளை படைத்துள்ளது இந்திய அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டெவோன் கான்வே (1), ரச்சின் ரவீந்திரா (4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர்.

கிளென் பிலிப்ஸ் (48), மார்க் சாப்மேன் (32) ஆகியோர் சற்று ஆறுதல் அளித்தாலும், மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பும்ரா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
154 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
குறிப்பாக அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 20 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்கள் விளாசினார். அவரது ஸ்டிரைக் ரேட் 340 ஆக இருந்தது. மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி பிரிக்க முடியாத அளவிற்கு 102 ரன்கள் சேர்த்தது.
இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 10 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது.
60 பந்துகள் மீதம் வைத்து வெற்றி
சர்வதேச டி20 போட்டிகளில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. 154 ரன்களைத் துரத்திய இந்தியா, இன்னும் 60 பந்துகள் (10 ஓவர்கள்) மீதம் இருக்கையிலேயே வெற்றி பெற்றது. இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 37 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது (2024 முதல் தற்போது வரை). இதன் மூலம் 2016-18 காலகட்டத்தில் பாகிஸ்தான் படைத்த 11 தொடர் வெற்றிகள் என்ற சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாகப் பெறும் 10வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியா (8 தொடர்கள்) மற்றும் பாகிஸ்தான் (5 தொடர்கள்) ஆகிய அணிகளின் சாதனைகளை இந்தியா முறியடித்துள்ளது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை எந்த ஒரு அணியும் 10 ஓவர்களுக்குள் எட்டிப்பிடித்ததில்லை. அந்த வகையில் நியூசிலாந்திற்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.