கவுஹாத்தி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 154 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியின் அதிரடி ஆட்டம் மற்றும் தனது பள்ளிப் பருவம் குறித்து பேசினார்.
இந்தப் போட்டி முடிந்த பின் வர்ணனையாளர், "நீங்கள் பள்ளியில் படிக்கும் போதே எதிரணியை இப்படித்தான் ஆதிக்கம் செலுத்தி ஆடுவீர்களா?" என்று வேடிக்கையாகக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "எனது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு விளையாடுவதற்கு நிறைய நேரம் ஒதுக்கித் தந்தார்கள். தேர்வு நேரங்களில் கூட எனக்கு விடுமுறை அளித்து மைதானத்திற்குச் சென்று பயிற்சி செய்ய அனுமதித்தார்கள். அங்குதான் நான் இது போன்ற ஆட்டத்தைக் கற்றுக்கொண்டேன்" என்று ஜாலியாகக் குறிப்பிட்டார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டம் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோமோ, அதுதான் இந்த ஆட்டம். முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இலக்கை விரட்டினாலும் சரி, இந்த அதிரடிப் பாணியைக் கடைப்பிடிக்கவே விரும்புகிறோம்.
ஒருவேளை நாளை 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையோ அல்லது 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையோ இழந்தாலும், அந்தச் சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், டி20 கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல, இந்த அதிரடி அணுகுமுறைதான் சிறந்தது என்று நான் கருதுகிறேன்" என்று விளக்கமளித்தார்.
அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஆட்டம் குறித்துப் பேசிய கேப்டன், "முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பற்றி நான் என்ன சொல்ல? அவர்கள் எனது வேலையை மிகவும் எளிதாக்கிவிட்டார்கள். அவர்கள் அமைத்துத் தரும் அடித்தளம் தான் எனக்குப் பெரிய பலமாக இருக்கிறது" என்று பாராட்டினார்.
இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் குறித்துப் பேசிய சூர்யகுமார், "ரவி பிஷ்னோய்யின் திட்டங்கள் எப்போதும் தெளிவாக இருக்கும். அவருக்குத் தனது பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அணிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட் எடுத்துக் கொடுக்கிறார். அவரை அணியில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுத்து, பிஷ்னோய்யை களமிறக்கியது சரியான முடிவாக அமைந்தது" என்று தெரிவித்தார்.