IND vs NZ: 22 பந்துகளில் அரைசதம்..டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா புதிய சாதனை..நியூசிலாந்து திணறல்
நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். டி20 உலகக்கோப்பை இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் ஒரு பயிற்சி களமாக இரு அணிகளுக்குமே அமையும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
நாக்பூரில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்ய நியூசிலாந்து அணியால் பணிக்கப்பட்டது. நாக்பூரில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.

இதனால் சஞ்சுஸ் சாம்சன் அதிரடியாக விளையாட முற்பட்டு 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். மூன்றாவது வீரராக விளையாடிய இஷான் கிஷன் 8 ரன்களில் வெளியேற, இந்திய அணி 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. பவர் பிளேக்குள் இரண்டு விக்கெட்டுகள் சென்றதால் இந்தியா பின்னடைவை சந்திக்கப் போகிறது என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் அபிஷேக் ஷர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சூரியகுமார் யாதவ் கொஞ்சம் அடக்கி வாசிக்க அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார். கொஞ்சம் கூட பயப்படாமல் பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
அப்போது அவர் நான்கு பவுண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 8.4 ஓவர்களில் எல்லாம் 100 ரன்களை கடக்க பத்து ஓவர் முடிவில் 117 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா பவர் பிளேக்குள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 49 சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 25 பந்துகளுக்குள் அபிஷேக்சர்மா எட்டு முறை அரைசதம் அடித்து இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் 7 முறை அடித்து உள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் தற்போது அபிஷேக் ஷர்மாவுக்கு இருக்கின்றது. இதற்கு முன்பு ராகுல் 23 பந்துகளிலும், ரோகித் சர்மா 23 பந்துகளிலும் நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தனர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.


Click it and Unblock the Notifications