Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: அந்த பேட்டை கொடு.. அபிஷேக் சர்மாவை சூழ்ந்த நியூசிலாந்து வீரர்கள்.. என்ன நடந்தது?

கவுஹாத்தி: இந்தியா - நியூசிலாந்துக்கு அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மா 300 க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி ஆட்டம் ஆடினார். வெறும் 14 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார். அவரது இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போன நியூசிலாந்து வீரர்கள், மைதானத்திலேயே அவரது பேட்டை வாங்கிச் சோதித்துப் பார்த்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு, நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர், துவக்க வீரர் டெவோன் கான்வே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி ஆகியோர் அபிஷேக் சர்மாவைச் சூழ்ந்து கொண்டனர். சிரித்துக்கொண்டே அபிஷேக் சர்மாவின் பேட்டை வாங்கிய அவர்கள், அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்து ஆய்வு செய்தனர். "எப்படிப் பந்துகள் இப்படிப் பறக்கின்றன? இந்த பேட்டில் விசேஷமாக ஏதேனும் உள்ளதா?" என்று அவர்கள் கேட்பது போலவே அந்தத் தருணம் அமைந்திருந்தது.

IND vs NZ Abhishek Sharma s Bat Tested by NZ Players Recalls Ponting 2003 Rumors

2003 உலகக்கோப்பை ஸ்பிரிங் பேட்

இந்தச் சம்பவத்தைப் பார்க்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு 2003 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி ஞாபகம் வரக்கூடும். அன்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்தியப் பந்துவீச்சைச் சிதறடித்துச் சதம் விளாசினார். அப்போது பாண்டிங் பயன்படுத்திய பேட்டிற்குள் 'ஸ்பிரிங்' வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் தான் பந்து அவ்வளவு வேகமாகச் செல்கிறது என்றும் ஒரு வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலத்தில், பள்ளிக்கூடங்கள் மற்றும் தெருக்களில் இந்த வதந்தி பரவலாகப் பேசப்பட்டது.

அதேபோலத் தற்போது அபிஷேக் சர்மாவின் பேட்டிலும் 'ஸ்பிரிங்' உள்ளதா என்று நியூசிலாந்து வீரர்கள் சோதித்துப் பார்ப்பது போல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது சிக்ஸர்கள் அனாயசமாக மைதானத்தை விட்டு வெளியேறின.

யுவராஜ் சாதனைக்கு அருகில்

இப்போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா, 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங்கின் 12 பந்து அரைசத சாதனையை முறியடிக்க அவருக்கு 2 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும், 14 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் இது குறித்துப் பேசுகையில், "அபிஷேக் சர்மாவின் சிக்ஸர் அடிக்கும் திறமை யாருக்கும் வராது. அவர் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு ஆடுகிறார். டி20 கிரிக்கெட்டில் ஒருவர் இது போன்ற ஃபார்மில் இருக்கும்போது, அவரைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்" என்று ஒப்புக்கொண்டார்.

தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, 36 போட்டிகளில் 1267 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 195க்கு மேல் உள்ளது என்பது எதிரணிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.

Story first published: Monday, January 26, 2026, 15:46 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+