இஸ்லாமாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷாஷாத் இந்தியாவை கடுமையாக கிண்டல் செய்யும் வகையில் பேசி இருக்கிறார். நியூசிலாந்து அணி சிறு குழந்தையை அடிப்பதை போல இந்திய அணியை அடித்து விட்டு சென்று இருக்கிறது என பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது ரோஹித் சர்மா, "எங்களுக்கு ஒரு மோசமான நாள் அமைந்துவிட்டது. ஆனால், மீண்டு வந்து விடுவோம்." என்றார்.

அதேபோல முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது. ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதை அடுத்து சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இருந்தது.
இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷாஷாத் இந்திய அணியை விமர்சித்து பேசி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து, இந்திய அணியை அடிப்பதற்கு உரிமை உள்ளவர்கள் போல வீழ்த்தி இருக்கிறார்கள். இந்திய அணியை சிறு குழந்தையை அடிப்பதைப் போல அடித்து விட்டு சென்று இருக்கிறார்கள்." என்றார்.
மேலும், "இந்திய அணியை வைத்து நியூசிலாந்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். இப்போது மக்கள், "இந்திய அணி பேப்பரில் தான் புலி. ஆனால், சொந்த மண்ணிலேயே தோல்வி அடைந்து விட்டார்கள்" என சொல்லி வருகிறார்கள்." என்றார் அகமது ஷாஷாத்.
மேலும், "இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது ரோஹித் சர்மா, "எல்லோருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும்." என்றார். அதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். அது சரியான விஷயம் தான். ஆனால், இரண்டாவது போட்டியிலும் மோசமாக ஆடியதை பார்க்கும் போது இந்திய அணி இதற்கு பழகிவிட்டதை போல உள்ளது." என அகமது ஷாஷாத் பேசி இருக்கிறார்.