IND vs NZ: என்ன பண்ணி வச்சுருக்க? வருண் செய்த செயல்.. கோபத்தின் உச்சிக்கே சென்ற அர்ஷ்தீப் சிங்
ராய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாலும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இது மோசமான நாளாக அமைந்தது. விக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவர், சக வீரர் வருண் சக்கரவர்த்தியை முறைத்து பார்த்த சம்பவம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஷ்தீப் சிங்கிற்கு எதுவும் சரியாக அமையவில்லை. அவர் வீசிய முதல் ஓவரிலேயே நியூசிலாந்து வீரர்கள் 18 ரன்களை விளாசினர். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் அவர் சமன் செய்தார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாகக் கையாண்டனர். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 53 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவர் பரபரப்பு
அர்ஷ்தீப் சிங்கின் கோபத்திற்கு முக்கிய காரணம் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நடந்த சம்பவம்தான். ஏற்கனவே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த விரக்தியில் இருந்த அவர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை நியூசிலாந்து வீரர் ஜக்கரி பவுல்க்ஸ் வானத்தை நோக்கித் தூக்கி அடித்தார்.
பந்து நேராக ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தியை நோக்கிச் சென்றது. ஆனால், வருண் சக்கரவர்த்தி அந்த எளிய கேட்சை பிடிக்கத் தவறினார். அதுமட்டுமின்றி, அவரது கையில் பட்ட பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்குச் சென்றது.
அர்ஷ்தீப் ரியாக்ஷன்
கடைசி நேரத்தில் கேட்ச் நழுவி அது சிக்ஸராக மாறியதைப் பார்த்த அர்ஷ்தீப் சிங் கடும் கோபமடைந்தார். அவர் எதுவும் பேசவில்லை என்றாலும், வருண் சக்கரவர்த்தியை நோக்கி அவர் முறைத்து பார்த்த விதம் அவரது கோபத்தை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்திய அணி பந்துவீச்சில் சொதப்பினாலும், பேட்டிங்கில் மிரட்டியது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது. இதனால் அர்ஷ்தீப் சிங்கின் மோசமான பந்துவீச்சு அணியின் வெற்றியைப் பாதிக்கவில்லை.


Click it and Unblock the Notifications