துபாய்: உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி செய்து இருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் விராட் கோலி களம் இறங்கிய போது இந்த சாதனையை எட்டினார். இது அவரது 300 ஆவது ஒருநாள் போட்டியாகும்.
இதன் மூலம் 300 ஒருநாள் போட்டிகள், 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங் போன்ற பல ஜாம்பவான் வீரர்கள் 100 டெஸ்ட் போட்டி மற்றும் 300 ஒருநாள் போட்டி என்ற மைல்கல்லை எட்டி உள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியதில்லை.

அதே போல, ரோஹித் சர்மா, டிம் சவுத்தி, பாபர் அசாம் போன்ற பல வீரர்கள் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் இன்னும் 300 ஒருநாள் போட்டி மற்றும் 100 டெஸ்ட் போட்டி என்ற மைல்கற்களை எட்டவில்லை. இந்த கடினமான மைல்கல் சாதனையை செய்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.
2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமானார். அப்போதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து இடம் பெற்று ஆடி வருகிறார். இதுவரை 300 ஒருநாள் போட்டிகள், 123 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடி இருக்கிறார். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 முதல் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10,000 ரன்கள் மற்றும் 14,000 ரன்களை அடித்து சாதனை படைத்து இருக்கிறார் கோலி. தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை 14,085 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இன்னும் 150 ரன்கள் சேர்த்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாராவை முந்தி இரண்டாவது இடத்தை பிடிப்பார்.
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்று உள்ளனர். முகமது ஷமி மட்டுமே ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்று இருக்கிறார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹர்திக் பாண்டியா இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட இருக்கிறார். நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.