IND vs NZ: தங்க பேட் கனவு விராட் கோலிக்கு போச்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் கிறிஸ் கெயில் தான் பாஸ்
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.
இதனை அடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்களும், கில் 50 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கினார். யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ரன்னில் அவர் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்க பேட் வாங்கும் பந்தயத்தில் இருந்து விராட் கோலி விலகிவிட்டார்.
தற்போது நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரச்சின் ரவீந்திரா 263 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கின்றார். பென் டக்கட் 227 ரன்களும், ஜோ ரூட் 225 ரன்களும், விராட் கோலி 218 ரன்களும் அடித்திருக்கிறார்கள். தற்போது கோலி இந்த பட்டியலில் இருக்கின்றார். ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தில் 75 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே அவருக்கு தங்க பேட் கிடைக்கும்.
ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிகிறது. இதன் காரணமாக ரச்சின் தங்க பேட் வாங்குவது உறுதியாகி இருக்கிறது. இதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 791 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். கோலி 746 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்த பட்டியலில் கெயிலை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றால் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்திருந்தால் முதலிடத்தை பிடித்திருக்கலாம். ஆனால் விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்திருந்ததால் அந்த சாதனை பறிபோகிவிட்டது. இனி சாம்பியன்ஸிப் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவது என்பது மிகவும் கடினம் என்பதால் அந்த சாதனை தற்போது உடைக்க முடியாமல் கோலிக்கு போய்விட்டது.


Click it and Unblock the Notifications