
இந்தியா - நியூசி. போட்டி
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ரசிகர்கள் அமர்ந்து இருந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

போராட்டம்
சீக்கியர்கள் சிலர் காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய டி ஷர்ட்கள் அணிந்தும், பதாகைகளை காட்டியும் போராடினர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை நிறுத்தினால் தொடர்ந்து போட்டியை காணலாம் என பாதுகாவலர்கள் அவர்களை எச்சரித்தனர்.

கையில் விலங்கு
எனினும், அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். அதற்கும் அவர்கள் உடன்படாததை அடுத்து அவர்களை கைது செய்து கையில் விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர். இதனால், போட்டியில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர் போராட்டம்
உலகக்கோப்பை தொடரில் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியிலும், இந்தியா - இலங்கை போட்டியிலும் பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீர் தொடர்பான வாசகங்கள் தாங்கிய விமானங்கள் வானில் பறந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மைதானத்தில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மழையால் தடை
இந்த பரபரப்புக்கு இடையே போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து இருந்த நிலையில், கடுமையாக மழை பெய்தது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால், போட்டி மறுதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டாம் நாளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், போட்டி நடக்குமா என்றசந்தேகம் உள்ளது.


Click it and Unblock the Notifications