IND vs NZ: 5 சிக்சர்கள்.. 89 ரன்கள் விளாசிய மிட்செல்.. 200 ரன்கள் ஜஸ்ட் மிஸ்.. இந்தியாவுக்கு சவால்
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த நியூசிலாந்து பேட்டர்கள் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவை தவிடுபொடியாக்கிய நியூசிலாந்து பேட்டர் டேரில் மிட்செல், இறுதிவரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தவிக்க விட்டார்.
ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே டிம் சீஃபெர்ட்டை வெறும் 2 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றி இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பின் ஆலன் மற்றும் டேரில் மிட்செல் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பவுண்டரிகளே அடிக்காமல் 5 சிக்சர்களை மட்டுமே பறக்கவிட்ட பின் ஆலன், 25 பந்துகளில் 40 ரன்கள் குவித்து நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் நமன் திர்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நங்கூரமாக நின்ற டேரில் மிட்செல் வெறும் 26 பந்துகளிலேயே தனது அரைசதத்தைக் கடந்து மிரட்டினார். 100-வது போட்டியில் ஆடிய கிளென் பிலிப்ஸ் 17 ரன்களில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் டேரில் மிட்செலுடன் கைகோர்த்த அதிரடி வீரர் பெவோன் ஜேக்கப்ஸ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 39 ரன்கள் விளாசி களத்தில் நின்றார். இறுதிவரை இந்திய பவுலர்களிடம் சிக்காத டேரில் மிட்செல், 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 171.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 89 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 75 ரன்களைக் குவித்து ஸ்கோரை எகிற வைத்தது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் நியூசிலாந்து 52 ரன்களை குவித்தது.
இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 33 ரன்களுக்கும், அக்சர் படேல் 36 ரன்களுக்கும், நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்களுக்கும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் 40 ரன்களையும், பிரின்ஸ் யாதவ் 44 ரன்களையும் வாரி வழங்கி விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். இறுதியில் நியூசிலாந்து 198 ரன்கள் எட்டியது.


Click it and Unblock the Notifications
