துபாய்: 2023 உலகக் கோப்பையில் நடந்த அதே சம்பவங்கள் தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் நடந்து வருவதை ஒப்பிட்டு இந்திய ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கலக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருந்தது.
அந்தத் தொடரில் இந்திய அணி தான் ஆடிய முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று வந்தது. அதேபோல, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி இதுவரை தான் ஆடிய இரண்டு குரூப் சுற்றுப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது.

2023 உலகக் கோப்பைக்கு முன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நிதானமாக விளையாடுவதாக விமர்சனம் இருந்தது. அதேபோன்று, தற்போதும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் அவரது பேட்டிங் மீது விமர்சனம் இருந்தது. ஆனால், 2023 உலகக் கோப்பையைப் போலவே தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் சதம் அடித்து பதிலடி கொடுத்து இருக்கிறார்.
உலகக் கோப்பையைப் போன்று ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துவக்க வீரராக அதிரடியாக ரன் சேர்த்து பவர் பிளேயில் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தி வருகிறார். முகமது ஷமி உலகக் கோப்பையைப் போலவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்.
உலகக் கோப்பையைப் போலவே சாம்பியன்ஸ் டிராபியிலும் இங்கிலாந்து அணி குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. அப்போதும் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்து தான் தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இப்போதும் அதே சம்பவம் நடந்து இருக்கிறது.
2023 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்து இருந்தது. இப்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்து இருக்கிறது.
2023 உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டது. எனினும், உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது. கிட்டத்தட்ட அதே போன்ற சூழ்நிலை தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் நிலவி வருகிறது. அது தான் இந்திய ரசிகர்களுக்கு அதிக கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இழந்திருந்தது. ஆனால், தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை எட்டி வென்று இருக்கிறது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது. இப்போதும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா போட்டி முடிந்தவுடன் என்ன நடக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சம்பவங்களை ஒப்பிட்டு ஒருவேளை 2023 உலகக் கோப்பையைப் போலவே இப்போதும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலியா அணியிடம் இறுதியில் தோல்வியடைந்து விடுமோ? என்ற அச்சம் மற்றும் சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை பதிவுகளாகவும், மீம்ஸ்களாகவும் சில ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.