பெங்களூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கனமழை காரணமாக திட்டமிட்டபடி தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மறுபக்கம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இழந்து நிற்கிறது. இதனால் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி போராட்டத்தை வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டன்சியில் இருந்து டிம் சவுதி விலகியுள்ள நிலையில், புதிய கேப்டனாக டாம் லேதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இதனால் வலிமை வாய்ந்த இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியால் சவால் அளிக்க முடியுமா என்று பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் டெஸ்ட் போட்டி 5 நாட்களும் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்களில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை மூலம் தெரிய வந்தது. ஏற்கனவே இரு அணிகளின் ஒருநாள் பயிற்சியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் உலகத் தரம் வாய்ந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மழை பெய்தாலும், சில நிமிடங்களிலேயே மைதான ஊழியர்களால் பிட்சை தயார் செய்ய முடியும். இந்த நிலையில் சின்னச்சாமி மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டியை தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் டாஸ் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.