IND vs NZ Final: சர்வ நாடியும் அடங்கி ஒடுங்கிய நியூசிலாந்து.. அபிஷேக் சர்மா செய்த சம்பவம் அப்படி!
அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா, தன் மீதான விமர்சனங்களுக்குத் தனது பேட் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அவர் ஆடிய ஆட்டம் நியூசிலாந்து அணியை கதற வைத்தது.
அபிஷேக் மீது பதற்றம்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரை சஞ்சு சாம்சன் எதிர்கொண்ட நிலையில், இரண்டாவது ஓவரில்தான் அபிஷேக் சர்மா தனது முதல் பந்தைச் சந்தித்தார். இந்தத் தொடர் முழுவதும் போதிய ரன்கள் எடுக்காமல் தடுமாறி வந்ததால், இறுதிப்போட்டியில் அவர் எப்படி விளையாடுவாரோ என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
சஞ்சு சாம்சனை விட ஆரம்பத்தில் சற்று நிதானமாகவே அவர் தொடங்கினார். ஆனால் ஒருசில பந்துகளுக்குப் பிறகு அபிஷேக்கின் ஆட்டத்தில் அனல் பறக்கத் தொடங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் விரட்டி அடித்தார். இதன் மூலம் தன் மீது வைக்கப்பட்டிருந்த அத்தனை விமர்சனங்களையும் அவர் தவிடுபொடி ஆக்கினார்.

18 பந்துகளில் மிரட்டல் அரைசதம்
நியூசிலாந்து பந்துவீச்சைச் சற்றும் மதிக்காமல் விளையாடிய அபிஷேக் சர்மா, வெறும் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டி போன்ற பெரிய மேடையில் இளம் வீரர் ஒருவர் இவ்வாறு ஆடுவது எளிதான காரியம் அல்ல. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரது இந்தச் சிறப்பான இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 247.62 என்ற வியக்கத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், இந்திய அணிக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
பவர் பிளேவில் 92 ரன்கள்
அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடியால் இந்திய அணி பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களிலேயே 92 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. பவர் பிளே முடிவதற்குள்ளாகவே அபிஷேக் சர்மா அரைசதம் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரன் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொண்டார்.
மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய சஞ்சு சாம்சனும் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். இது இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அடிக்கும் மூன்றாவது அரைசதமாகும். இருவரின் அதிரடியால் இந்திய அணி இமாலய ஸ்கோரை நோக்கி முன்னேறியது.


Click it and Unblock the Notifications