துபாய்: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டிக்கு தென்னாப்பிரிக்க ஊடகம் ஒன்றில் கடுமையான விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. அதில் "கம்பீரின் ஆணவம் மிகவும் கொடூரமானது" என்றும், "துபாய் மைதானத்தால் இந்தியாவுக்கு எந்த சாதகமும் இல்லை என கம்பீர் பேசுவது பைத்தியக்காரத்தனத்தின் எல்லை" எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
கம்பீர் மீதான இந்த விமர்சனத்திற்கு முக்கிய காரணமே தென்னாப்பிரிக்க அணிக்கு ஏற்பட்ட பாதிப்பு தான். அது பற்றியும், கம்பீர் என்ன சொன்னார் என்பது பற்றியும் பார்த்தால் தான் தென்னாப்பிரிக்க ஊடகத்தின் இந்த விமர்சனம் ஏன் என்பது புரியும்.

தென்னாப்பிரிக்க அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. அதற்கு இந்திய அணி துபாயில் தனது போட்டிகளை ஆடுவதும் ஒரு காரணம் என்ற விமர்சனம் மற்றும் சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதன் பின்னணியில் தான் கம்பீரின் பேட்டியை தென்னாப்பிரிக்க ஊடகம் விமர்சித்து இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்தாலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணி இறுதிக்கு முன்னேறினாலும், இறுதி போட்டிக்கு முன்னேறினாலும் அந்த போட்டிகளும் துபாயில் நடைபெறும் என்பது போட்டி அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி அரை இறுதியில் எந்த அணியுடன் மோதும் என்பது தெரியாததால், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்திய அணியின் மூன்றாவது குரூப் சுற்றுப் போட்டியின் போது துபாய்க்கு பயணம் செய்தனர்.
இது முட்டாள்தனமான விஷயம் என கிரிக்கெட் உலகில் விமர்சனம் எழுந்தது. இந்திய அணிக்கு மட்டும் ஏன் சாதகமான விஷயம் அளிக்கப்பட்டு இருக்கிறது? அந்த ஒரு அணி மட்டும் எப்படி ஒரே மைதானத்தில் தங்களின் போட்டிகள் அனைத்தையும் விளையாட முடியும்? என்ற கேள்வி பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களால் முன்வைக்கப்பட்டது.
இதனிடையே இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது உறுதியானதால், தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு பயணம் செய்து, பின் துபாயில் இருந்து மீண்டும் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்தது. பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடி தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா.
இதற்கிடையே இது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, "இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர்களை தாக்கிப் பேசிய கவுதம் கம்பீர், "சில நபர்கள் குழந்தையை எப்போதும் தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் எப்போதும் வளரவே மாட்டார்கள்."
"எது சாதகமான விஷயம்? நாங்கள் ஒரு நாள் கூட துபாய் மைதானத்தில் பயிற்சி செய்யவே இல்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில்தான் பயிற்சி செய்கிறோம். இந்த இரண்டு இடங்களுக்கும் 180 டிகிரி அளவுக்கு வித்தியாசம் உள்ளது. இங்குள்ள சூழ்நிலை அங்கு இல்லை. இரண்டு இடங்களிலும் இருக்கும் விக்கெட்களை நீங்கள் பார்த்தால், அது பூமிக்கும் வானத்துக்குமான வித்தியாசமாக இருக்கும்," என்றார் கம்பீர்.
இது பற்றி தென்னாப்பிரிக்க ஊடகமான ஐஓஎல் (IOL) வெளியிட்டுள்ள விமர்சனக் கட்டுரையில், "ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றிக்குப் பிறகு கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்கள் மீது வெளிப்படுத்திய தாக்குதல் பைத்தியக்காரத்தனத்தின் எல்லை. ஐசிசி அகாடமிக்கும் துபாய் சர்வதேச மைதானத்திற்கும் சில நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது என்பதை முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர் மறந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்காக நாம் அவரை ஆதரிக்க முடியாது. இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையிலும் கம்பீரின் ஆணவம் என்பது கொடூரமானது" என எழுதப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.