Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 3வது முறையாக வென்று இந்திய அணி சரித்திர சாதனை.. பைனலில் நியூசிலாந்தை காலி செய்தது

அகமதாபாத்: டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது நியூசிலாந்து அணி எடுத்த தவறான முடிவு என்று அப்போது கேப்டன் சாண்ட்னருக்கு தெரியவில்லை.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலில் இருந்தே பட்டையை கிளப்பி நியூசிலாந்து பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர். நவம்பர் மாதம் வரவேண்டிய தீபாவளியை மார்ச் மாதத்தில் வாண வேடிக்கையை விட்டுக் கொண்டாடினார்கள். நியூசிலாந்து பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் பறக்க விட்டனர்.

குறிப்பாக அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் பொறுப்பும் அதிரடியும் கலந்து ரன்களை சேர்த்தார். இந்த கட்டத்தில் நியூசிலாந்து அணி பந்துகளை மெதுவாக வீசி தவறு செய்தது. அதனை அல்வா போல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர்.

பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது.

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதேபோன்று மூன்றாவது வீரராக களம் இறங்கிய இசான் கிசனும் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பினார். அவரும் பவுண்டரி, சிக்சர் என பறக்க விட 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இதில் எட்டு சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த கட்டத்தில் ஆட்டத்தின் 16-வது ஓவரில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சாம்சன், இசான் கிசான், சூரியகுமார் யாதவ் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

இது ஆட்டத்தில் சிறிய சரிவை ஏற்படுத்தியது. அதன் பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பவுண்டரிகளை அடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளுக்கு பவுண்டரிகளையே அடிக்காமல் இந்தியா இருந்தது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் சிவம் துபே இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 24 ரன்கள் குவித்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இது டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் நியூசிலாந்து களமிறங்கியது. அரை இறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய, ஃபின் ஆலன் விக்கெட்டை அக்சர் பட்டேல் ஒன்பது ரன்களில் வீழ்த்த நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது.

இதேபோன்று ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரனான டிம் ஃசெபர்ட் மட்டும் அதிரடி காட்டினார். இதனால் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 52 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைப் போன்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, டிம் செபர்ட் 26 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது. இந்த கட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு டாரல் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்து கௌரவமான தோல்வியை தழுவ வேண்டும் என்று நோக்கில் அதிரடி காட்ட முயன்றனர்.

இருப்பினும் மிட்செல் 11 பந்துகளை எதிர் கொண்டு 17 ரன்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியான நிலையில் கீழ் வரிசை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பைனலில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. டி20 உலககோப்பை வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இதுவாகும். கோப்பையை வென்ற உடன், கேப்டன் சூரியகுமார் உள்ளிட்ட வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Story first published: Sunday, March 8, 2026, 22:44 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+