Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்க காரணமே அந்த மேட்ச்சில் நாங்க வாங்கிய அடிதான்.. மனம் திறந்த சிவம் துபே

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த வெற்றிக்கு இந்திய அணி சந்தித்த ஒரு படுதோல்விதான் முக்கியக் காரணமாக அமைந்தது என ஆல்ரவுண்டர் சிவம் துபே தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அந்தத் தோல்விக்குப் பிறகுதான், இந்திய அணியின் ஆட்டம் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியதாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா கொடுத்த சவுக்கடி

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவிக்க, இந்திய அணி வெறும் 111 ரன்களுக்குச் சுருண்டு 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

IND vs NZ Final Shivam Dube Credits Crushing Loss to South Africa as Turning Point for India s World Cup Glory

இது குறித்துப் பேசிய சிவம் துபே, "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகுதான் நாங்கள் முழுமையான எழுச்சி பெற்றோம். அதற்கு முன்பும் நாங்கள் நன்றாகவே விளையாடி வந்தோம். ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு நாங்கள் இன்னும் விழிப்புடன் செயல்படத் தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் முற்றிலும் ஒரு புதிய அணியாக உருவெடுத்தோம். எங்களின் உச்சபட்ச ஆட்டம் இறுதிப்போட்டியில் வெளிப்பட்டது" என்று தெரிவித்தார்.

தோல்விக்குப் பிந்தைய விஸ்வரூபம்

சிவம் துபே கூறுவது போல, அந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அசுர பலத்துடன் காணப்பட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக 256 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 253 ரன்கள் மற்றும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 255 ரன்கள் என இமாலய ஸ்கோர்களைக் குவித்து மிரட்டியது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 196 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

எனது பணி என்ன?

இந்த உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து 9 போட்டிகளிலும் விளையாடிய சிவம் துபே 235 ரன்களைக் குவித்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அணியில் தனது பங்கு என்ன என்பது குறித்துப் பேசிய அவர், "என்னுடைய பணி மிகவும் எளிமையானது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இதை முன்பே என்னிடம் தெளிவாகக் கூறிவிட்டார்கள். ஸ்டிரைக் ரேட்டை எப்போதுமே அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேலை.

அதேபோலப் பந்துவீச அழைக்கப்பட்டால், ரன்களைக் கட்டுப்படுத்தித் துல்லியமாகப் பந்துவீச வேண்டும். கடந்த உலகக் கோப்பையிலும் எனக்கு இதே வேலைதான் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓரிரு போட்டிகளில் மட்டுமே என்னால் பெரிய அளவில் ரன் குவிக்க முடிந்தது. இம்முறை, ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி விளையாட முடிவு செய்தேன்" என்று கூறினார்.

தொடர்ந்து அதிரடியாக சிக்ஸர்களைப் பறக்கவிடுவது கடினமான வேலையாகத் தோன்றவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "என் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது. இதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது. உள்ளூர் மண்ணில் உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே எங்களின் ஒரே இலக்காக இருந்தது" என்று சிவம் துபே பெருமையுடன் தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 10, 2026, 7:59 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+