அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்துடன் காணப்பட்டாலும், வரலாறு என்று வரும்போது நியூசிலாந்து அணியின் கைதான் ஓங்கியுள்ளது. குறிப்பாக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணிக்கு நியூசிலாந்து சிம்ம சொப்பனமாகவே இருந்துள்ளது. இருதரப்புத் தொடர்களில் இந்திய அணி நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தினாலும், உலகக் கோப்பையில் மட்டும் ஏன் தடுமாறுகிறது என்பதற்கான காரணங்களை இங்கே காண்போம்.
ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி வெறும் 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது அதிர்ச்சியான தகவலாகும். அதிலும் குறிப்பாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில், நியூசிலாந்து அணியை இந்தியா இதுவரை வீழ்த்தியதே இல்லை. இந்த இரண்டு அணிகளும் மோதிய 3 டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த மோசமான வரலாற்றுப் பதிவு இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரசிகர்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய பலமே அவர்களது வேகப்பந்து வீச்சுதான். ஆட்டத்தின் தொடக்க ஓவர்களிலேயே பந்தை நன்றாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர்கள் வல்லவர்கள். கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையிறுதி மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
டிரெண்ட் போல்ட், டிம் சவுதி போன்ற பந்துவீச்சாளர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களைத் தொடக்கத்திலேயே வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும்போது, அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் சரிந்துவிடுகிறது. இதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்து வந்துள்ளது.

நியூசிலாந்து அணி தனிநபர் ஆதிக்கத்தை விட, ஒரு குழுவாகச் செயல்படுவதில் நம்பிக்கை கொண்டது. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வியூகங்களை அமைப்பார்கள். 2016 டி20 உலகக் கோப்பையில் நாக்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய அணியை வெறும் 79 ரன்களில் அவர்கள் சுருட்டினார்கள். வேகப்பந்து வீச்சு எடுபடாத அந்த ஆடுகளவில், மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியாவை வீழ்த்தினார்கள். இப்படி வியூகம் அமைத்து செயல்படுவதால் நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது கடினமாக உள்ளது.

வரலாறு நியூசிலாந்துக்குச் சாதகமாக இருந்தாலும், தற்போதைய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் தற்காப்பு ஆட்டத்தை விட அதிரடி ஆட்டத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
முன்பு போல ஸ்விங் பந்துவீச்சைக் கண்டு பயந்து நிதானமாக ஆடாமல், முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் புதிய முறையை இந்திய அணி கையில் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா, சிவம் துபே போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் நடுத்தர வரிசையில் இருப்பதால், தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நியூசிலாந்து அணியின் மன ரீதியான ஆதிக்கத்தை உடைக்க, இந்த அதிரடி அணுகுமுறை இந்திய அணிக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.