துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இதுவரை வாய்ப்பு பெறவில்லை என்பது ஒரு குறையாக சில ரசிகர்களால் சொல்லப்பட்டு வருகிறது. மொத்த பேட்டிங் ஆர்டரும் கைவிட்டாலும், ரிஷப் தனியாக நின்று தனது தனித்துவமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அப்படி ஒரு வீரரை எதற்காக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் வெளியே அமர வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இது நியாயமான கேள்வியாக இருந்தாலும், அணியின் சமநிலை காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

பேட்டிங் வரிசையில் ஆடும் ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அந்த சூழ்நிலையை சமாளிக்கும் திறன் உடையவராக இருக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில், மந்தமான ஆடுகளத்தில் ஆடி வருகிறது. ரிஷப் பண்ட் அதிரடி பேட்ஸ்மேன் எனும் நிலையில், அவர் ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் விளையாடும் போது, அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பாதகமாக முடியவும் வாய்ப்பு உள்ளது.
அவர் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டை பறி கொடுத்தால், அத்துடன் இந்திய அணியில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதன் பின் எதிரணி ஆதிக்கம் செலுத்துவதற்கும் அது வாய்ப்பளிக்கும்.
அதே சமயம் அக்சர் படேல் மற்றும் கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் ஐந்தாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசையில் ஆடும்போது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாகவும், சற்று அதிரடியாகவும் விளையாடுவார்கள். இந்திய ஆடுகளங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று இருந்தால், நிச்சயமாக ரிஷப் பண்ட்டை, கே.எல். ராகுலுக்கு பதிலாக விளையாட வைத்திருக்கலாம்.
ஆனால் இந்த தொடரில் துபாய் மைதானத்தில் இந்திய அணி தனது போட்டிகளை விளையாடி வருகிறது. அங்கு மந்தமான ஆடுகளம் இருக்கும் எனும் நிலையில், ரிஷப் பண்டின் பேட்டிங் முறை அங்கு பலனளிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை மாற்று வீரராக வெளியே அமர வைத்துள்ளது.