மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்போதுமே தனது அதிரடி கருத்துக்களால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பவர். ஆனால், இம்முறை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து, அவருக்கே வினையாக முடிந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் பாராட்டுக்கு கம்பீர் அளித்த பதில், கிரிக்கெட் ரசிகர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. "ஒரு தலைமை பயிற்சியாளர் இப்படி பேசலாமா?" என்று ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், கவுதம் கம்பீரைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், இந்திய அணியின் பயிற்சியாளர் நாற்காலி என்பது முட்கள் நிறைந்தது என்றும், அந்தப் பொறுப்பு எவ்வளவு கடினமானது என்பதையும் சுட்டிக்காட்டி கம்பீருக்குத் தட்டிக் கொடுத்திருந்தார். இது இயல்பான ஒரு பாராட்டுப் பதிவுதான்.

இதற்குப் பதிலளித்த கம்பீர், "தூசு அடங்கிய பிறகு, உண்மை மற்றும் தர்க்கம் ஆகியவை வெளிவரும். அப்போது ஒரு பயிற்சியாளருக்கு 'எல்லையற்ற அதிகாரம்' இருக்கிறது என்று சொல்லப்படுவது குறித்த தெளிவு கிடைக்கும்" என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
கம்பீரின் இந்த வரிகள் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, அணியின் தேர்வு விஷயத்திலோ அல்லது முக்கிய முடிவுகளிலோ தனக்கு முழுமையான அதிகாரம் இல்லை என்றும், தோல்விகளுக்குத் தான் மட்டுமே காரணமல்ல என்றும் அவர் சூசகமாகச் சொல்வதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தேர்வுக் குழுவின் மீது பழியைப் போடும் விதமாக இது இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கம்பீரின் இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு தலைமை பயிற்சியாளர் பொதுவெளியில் இப்படிப் பேசுவது, அணியின் சூழலைக் கெடுக்கும் என்றும், தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் கூறுகின்றனர்.
பல ரசிகர்கள் விராட் கோலியை உதாரணமாகக் காட்டி கம்பீரை விளாசியுள்ளனர். "விராட் கோலி எவ்வளவோ விமர்சனங்களைச் சந்தித்தார். நாலாபுறமும் நெருக்கடி வந்தபோதும், 'எனக்கு அதிகாரம் இல்லை, நிர்வாகம் தான் காரணம்' என்று அவர் ஒருபோதும் பொதுவெளியில் ட்வீட் போட்டதில்லை. ஆனால் கம்பீர் இப்படிச் செய்வது அழகல்ல" என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் இன்னும் கடுமையாக, "ஏதோ சாதாரண அணியை நீங்கள் சாம்பியன் ஆக்கியது போலப் பேசாதீர்கள். உலகின் சிறந்த கிரிக்கெட் அணியைப் பயிற்றுவிக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை கோலி வென்று கொடுத்தார். டி20 அணியை ரோஹித் சர்மா கட்டமைத்தார். டெஸ்ட் அணியை எப்படிச் சரிவடையச் செய்தீர்களோ, அதேபோல ஒருநாள் அணியையும் கோலி ஓய்வுக்குப் பின் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறது" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
"ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், அல்லது தோல்விக்குப் பிறகும் சமூக வலைதளத்தில் வந்து விளக்கம் கொடுப்பதை நிறுத்துங்கள். ஒரு தொழில்முறை பயிற்சியாளராக நடந்து கொள்ளுங்கள். வெற்றிகளைக் குவிப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்" என்று ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில், பயிற்சியாளர் இப்படிப் பேசுவது அணிக்கு நல்லதல்ல என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. வெற்றிகளைப் குவித்து விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டு, இணையத்தில் தத்துவங்கள் பேசுவது தேவையில்லாத வேலை என்று நெட்டிசன்கள் கம்பீரை கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.