நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைக் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நாக்பூரில் சந்தித்துப் பாராட்டினார். தங்கள் சந்திப்பின் போது எடுத்த படத்தை 'X' தளத்தில் பகிர்ந்த தரூர், கம்பீரை 'பழைய நண்பர்' எனக் குறிப்பிட்டார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் எதிர்கொள்ளும் பெரும் அழுத்தம், நாட்டின் மிகவும் கடினமான பணிகளில் ஒன்று என சுட்டிக்காட்டினார். "நாக்பூரில், எனது பழைய நண்பர் கௌதம் கம்பீருடன் ஒரு நல்ல மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலை நான் அனுபவித்தேன். பிரதமருக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் கடினமான வேலை அவருடையதுதான்!" என்று தரூர் பதிவிட்டிருந்தார்.

பொதுமக்களின் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், கம்பீரின் அமைதியான செயல்பாட்டை தரூர் பாராட்டினார். "தினமும் லட்சக்கணக்கானோரால் சந்தேகிக்கப்பட்டாலும், அவர் அமைதியாகவும் அஞ்சாமலும் தனது பணியைத் தொடர்கிறார்," என கம்பீரின் மனவுறுதியைத் தரூர் புகழ்ந்தார்.
தரூர், கம்பீரின் முன்மாதிரியான, அமைதியான உறுதிப்பாடு மற்றும் திறமையான தலைமைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியா தனது 'ஒயிட்-பால்' அட்டவணையின் முக்கியமான கட்டத்திற்குள் நுழைவதால், "இன்று முதல் அவருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மைதானத்திற்கு சென்ற சசி தரூர், போட்டியையும் பார்த்துவிட்டு, இந்தியாவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏசி அறையில் இல்லாமல், ரசிகர்களுடன் ரசிகர்களாக இந்தப் போட்டியை அமர்ந்து பார்த்ததாகவும், நியூசிலாந்து எடுத்த ரன்களை விட அதிக செல்ஃபிகளை ரசிகர்களுடன் எடுத்து கொண்டதாகவும் சசி தரூர் கூறினார். தற்போதைய நியூசிலாந்து டி20 தொடர், 2026 பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய ஒத்திகை ஆகும். நடப்புச் சாம்பியனான இந்தியா, அடுத்தடுத்து டி20 உலகக் கோப்பை பட்டங்களை வெல்ல இலக்கு வைத்துள்ளது.
இந்திய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடர் வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து அணி, அதே உத்வேகத்துடன் டி20 வடிவத்திலும் களமிறங்குகிறது. இதனால் இத்தொடர் மிகுந்த போட்டித்தன்மை கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.