மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி சதம் விளாசி மிரட்டிய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான காரணத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விளக்கியுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் முழு உடற்தகுதியுடன் இருந்தாலும், பந்துவீச்சில் இன்னும் ஒருநாள் போட்டிகளுக்கான தகுதியை எட்டவில்லை. "ஒருநாள் போட்டியில் முழுமையாக 10 ஓவர்கள் வீசுவதற்கான உடற்தகுதிச் சான்றிதழை தேசிய கிரிக்கெட் அகாடமியிடமிருந்து (COE - Centre of Excellence) ஹர்திக் பாண்டியா இன்னும் பெறவில்லை."
"விரைவில் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு, அவரது பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி அறிவிக்கப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு, பரோடா அணிக்காகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, விதர்பா அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடினார் 7-வது வீரராகக் களமிறங்கி, 92 பந்துகளில் 133 ரன்களைக் குவித்தார். இது இவரது முதல் 'லிஸ்ட் ஏ' (List A) சதம் ஆகும். குறிப்பாக, பார்த்த் ரெக்கடே வீசிய 39-வது ஓவரில், தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசி, அந்த ஓவரில் மட்டும் 34 ரன்களைக் குவித்தார் (6, 6, 6, 6, 6, 4). மொத்தம் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 144.57 ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டினார்.
ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் பழைய 'பவர் ஹிட்டராக' திரும்பியிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் பந்துவீசுவதற்கான பணிச்சுமையை தாங்கும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகவில்லை. டி20 உலகக்கோப்பையில் இந்தியா தனது பட்டத்தைத் தக்கவைக்க ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்பதால், அவரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க பிசிசிஐ விரும்பவில்லை.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி.