IND vs NZ: கேப்டனாக 4வது டி20 உலகக்கோப்பை.. மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
துபாய்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கியதன் மூலமாக ஹர்மன்ப்ரீத் கவுர் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்திய மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார்.
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் கேப்டனாக களமிறங்கியதன் மூலமாக இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4வது முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமையேற்றதன் மூலமாக, அதிக முறை ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 3 முறை ஐசிசி தொடர்களில் வழிநடத்தியதே சாதனையாக இருந்தது. அவர் 2012, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மிதாலி ராஜ் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். அதேபோல் ஹர்மன்ப்ரீத் கவுர் 2018, 2020, 2023 மற்றும் 2024 ஆகிய 4 ஆண்டுகளில் வழிநடத்தி சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் இந்திய அணிக்காக 9வது முறையாக டி20 உலககோப்பை தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடி வருகிறார். இதுவரை 174 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியதோடு, 119 போட்டிகளில் கேப்டனாகவும் ஹர்மன்ப்ரீத் கவுர் செயல்பட்டுள்ளார். இந்த 9 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி ஒரு முறை இறுதிப்போட்டிக்கும், 2 முறை அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஐசிசி தொடரிலும் வென்றதில்லை. இதனால் இந்த டி20 உலகக்கோப்பையை வென்று ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணி அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications