இந்தூர்: இந்திய கிரிக்கெட் அணியில் இன்று ஒரு முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் ஹர்ஷித் ராணா, தனது கடந்த கால வலிகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். "தேர்வுகளில் தோல்வியடைந்து வீட்டுக்கு வந்து தினமும் அப்பா முன்பு நின்று அழுதிருக்கிறேன்" என்று அவர் கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ள ஹர்ஷித் ராணா, தனது கிரிக்கெட் பயணத்தின் இருண்ட பக்கங்களை ஒரு ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்ஷித் ராணா, ஆரம்பக்காலத்தில் கடுமையான நிராகரிப்புகளைச் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "வெற்றி, தோல்வியை எப்படிக் கையாள்வது என்று எனக்கு இப்போது நன்றாகத் தெரியும். ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்காத காலத்தை நான் கடந்து வந்துள்ளேன். பல அணித் தேர்வு பரிசோதனைகளுக்கு போவேன்.. ஆனால் இறுதிப் பட்டியலில் என் பெயர் இருக்காது.
ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வந்து, என் அப்பா முன் நின்று தினமும் அழுவேன். ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டே வேண்டாம், விட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் என் அப்பா தான் என்னை விடாமல் துரத்தி, ஊக்கப்படுத்தினார். அவரால் தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன்" என்று கண் கலங்கக் கூறினார்.
வலைப்பயிற்சியில் யாருக்குப் பந்துவீசப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என்று பதிலளித்தார். "அவர்களுக்குப் பந்துவீசுவது எப்போதும் சவாலானது. வலைப்பயிற்சியில் கூட அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். என்னைச் சீண்டிவிட்டு, இன்னும் வேகமாக வீச வைப்பார்கள். அது என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர உதவுகிறது" என்றார்.
இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் (Test, ODI, T20) அறிமுகமாகிவிட்ட ஹர்ஷித் ராணா, இதுவரை 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான நடப்புத் தொடரிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தூரில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஹர்ஷித் ராணா தனது பந்துவீச்சு மூலம் இந்தியாவிற்குத் தொடரை வென்று தருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.