54 ரன்களுக்கு 7 விக்கெட்ஸ்.. 462 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. நியூசி. வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், திடீரென 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்களை குவித்தது. பின்னர் 356 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3வது நாளில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை சேர்த்திருந்தது.

பின்னர் 4வது நாளான இன்று சர்ஃபராஸ் கான் - ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சர்ஃபராஸ் கான் ஒரு பக்கம் அசத்தலாக விளையாடி சதம் விளாசினார். இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் அதிரடியாக அரைசதம் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை நெருங்கியது. பின்னர் மழை குறுக்கிட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கப்பட்டது.
அப்போது சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி பின்னடைவை சந்திக்க தொடங்கியது. புதிய பந்தில் நியூசிலாந்து பவுலர்கள் சரியான திட்டத்துடன் வந்தனர். அதன்பின் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகம் நம்பிய கேஎல் ராகுல் 12 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து வந்த ஜடேஜா புல் ஷாட் அடிக்க முயற்சித்து 2 ரன்களில் வெளியேற, அதிரடியாக ஆடிய அஸ்வின் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த டெய்லெண்டர்கள் ஒரு சில ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடைசி 54 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகி இருக்கிறது. பெங்களூர் பிட்சில் கடைசி நாள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், குறைந்தபட்சம் 170 ரன்களையாவது இலக்காக நிர்ணயம் செய்திருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி பவுலர்கள் சவால் அளிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.


Click it and Unblock the Notifications