புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் 12 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். அந்த மோசமான விஷயம் நடந்தால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் முதல் ஆளாக விமர்சனத்திற்கு உள்ளாவார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. அந்த போட்டி மழைக்கு நடுவே நடைபெற்ற நிலையில் இந்திய அணி பிட்ச்சை சரியாக கணிக்காமல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்ற அழுத்தத்தில் உள்ளது இந்திய அணி. இரண்டாவது போட்டி நடந்து வரும் புனே மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டாலும், இந்திய அணி அழுத்தத்துக்கு நடுவே தான் ஆடுகிறது.
ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் 12 ஆண்டுகளில் இதுவே இந்திய மண்ணில் இந்திய அணிக்கு ஏற்பட்ட முதல் டெஸ்ட் தொடர் தோல்வியாக இருக்கும். 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்து இருந்தது. மீண்டும் அது போன்ற ஒரு மோசமான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற பதற்றத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.
குறிப்பாக கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்திய அணி எப்படி செயல்படுகிறது? என்பதை அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர். இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த போதே அவர் மீது விமர்சனம் எழுந்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வி அடைந்தால் கவுதம் கம்பீர் நிச்சயம் பெரும் அழுத்தத்துக்கு உள்ளார். புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அது இந்திய அணிக்கு சிறிய பின்னடைவாக அமைந்து இருக்கிறது.