IND vs NZ: 23 ஆண்டுகள் எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்த நியூசிலாந்து.. இந்தியாவுக்கு சிக்கல்
புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் முதல்முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 100 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை பெற்ற அணி என்ற சாதனையை செய்து இருக்கிறது நியூசிலாந்து.

இதற்கு முன் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக மும்பை மற்றும் கொல்கத்தா டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை பெற்று இருந்தது. அதன் பின் இப்போது நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை பெற்று இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 356 ரன்கள் முன்னிலை பெற்று அந்தப் போட்டியையும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை செய்து இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த வகையில் நியூசிலாந்து வரலாற்று சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து இதுவரை 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து உள்ளது. அதன் மூலம் மொத்தம் 301 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.


Click it and Unblock the Notifications