IND vs NZ: 170 ரன்கள் கூட அடிக்க முடியாது என நினைத்தேன்..10 ஓவர் போட்டி போல் விளையாடினாங்க- EX வீரர்
வெவிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 198 ரன்கள் இலக்கை 13.2 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 170-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்வது கடினம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அதுகுறித்து ஜாலியாக பதிலளித்துள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 52 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் களம் இறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்கு முன்பாக, 170-க்கும் அதிகமான இலக்கை எட்டுவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா பதிவிட்டிருந்தார். ஆனால் இந்திய அணி 198 ரன்களை மிக எளிதாக சேஸ் செய்ததை அடுத்து, ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கலாய்க்கத் தொடங்கினர்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, . "X தளத்தை விட்டு தள்ளி இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது நம்மிடம் உள்ள மோசமான பக்கத்தையே வெளியே கொண்டு வருகிறது. தீவிரமாகச் சொல்வதானால், நான் 10 ஓவர்களில் 170 ரன்களை சேஸ் செய்வது கடினம் என்ற அர்த்தத்தில்தான் பதிவிட்டேன். அப்படிப் பார்த்தால் நான் சொன்னது சரிதானே!" என்று சிரித்தபடி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்ப ஓவர்களில் பந்து நன்றாக மூவ் ஆனது. ஆடுகளத்திலும் நல்ல ஸ்விங் இருந்தது. அதனால் தான் 170-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்வது கடினம் என நினைத்தேன். வர்ணனையாளர்களும் ஆடுகளம் சற்று சவாலாக இருப்பதாகவே கூறினர். ஆனால் இந்திய பேட்டிங் வரிசை அந்த கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி இலக்கை மிக எளிதாக எட்டிவிட்டது" என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி அக்டோபர் 30 அன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானமும் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


