புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நீக்கப்பட்டது சரியல்ல என்ற விமர்சனம் எழுந்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.
அதற்கு முக்கிய காரணம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்தது தான். அதனால் தான் தோல்வியை சந்தித்து இருந்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸிலும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இருந்த இந்திய அணி கடைசி 7 விக்கெட்களை வெறும் 54 ரன்களுக்கு இழந்தது. அதனால் இந்திய அணி முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாட்டால் தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை மாற்றி இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டு பந்து வீச்சாளர்களையும் மாற்றி இருக்கிறது. அது ஏன்? என முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேட்ஸ்மேன்கள் செய்த தவறுக்கு பந்து வீச்சாளர்கள் தண்டிக்கப்பட்டு இருப்பதாக கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "முந்தைய போட்டியில் இந்தியா இரண்டு பேட்டிங் சரிவை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த பின் இரண்டாவது சரிவை சந்தித்தது." என்றார்,

மேலும், "பேட்ஸ்மேன்கள் தான் அப்போது தவறு செய்தார்கள். என்ன சொல்லப்பட்டதோ அதை பேட்ஸ்மேன்கள் செய்யவில்லை. ஆனால், அதற்கான தண்டனையை தற்போது பந்து வீச்சாளர்கள் பெற்றுள்ளனர். ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடையே ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. சுப்மன் கில் அணிக்கு திரும்பியதால் இது நடந்தது. ஆனால், குல்தீப் யாதவை ஏன் நீக்கினீர்கள்? அவர் அணியில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும், அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்." என்றார்.
"சிராஜ் பந்து வீச்சில் சற்று சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவருக்கு இந்த நேரத்தில் ஆதரவு அளிப்பது அவசியம். அதை செய்யவில்லை. இந்தியா முதல் போட்டியில் பேட்ஸ்மேன்களால் தோல்வியடைந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா பேட்ஸ்மேன்களுக்கான நாடு. அவர்களைப் பற்றி மட்டும்தான் நாம் சிந்திக்கிறோம். பந்து வீச்சாளர்களைப் பற்றி இங்கு யாரும் கவலைப்படுவதில்லை." என்றார் ஆகாஷ் சோப்ரா.