
வேகப் பந்துவீச்சு எப்படி?
இந்திய அணியில் வேகப் பந்துவீச்சை பொறுத்தவரை இந்த தொடரில் முக்கிய வீரர் பும்ரா இடம் பெறவில்லை. அவர் இல்லாத வேகப் பந்துவீச்சு எடுபடுமா என்ற கேள்வி தொடர் துவங்கும் முன் இருந்தது. ஆனால், ஷமி சிறப்பாக பந்து வீசி, பும்ராவுக்கு அடுத்த சிறந்த பந்துவீச்சாளர் என்ற இடத்தை பிடித்துள்ளார். கலீல் அஹ்மது ஒரு போட்டியில் வாய்ப்பு பெற்றார், எனினும், அந்த போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

எத்தனை விக்கெட்கள்?
புவனேஸ்வர் குமாரும் நன்றாகவே பந்து வீசினார். இந்த தொடரில் ஷமி நான்கு போட்டிகளில் 9 விக்கெட்களும், புவனேஸ்வர் ஐந்து போட்டிகளில் 7 விக்கெட்களும் எடுத்தனர். கலீல் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இவர்கள் மூவர் தவிர வேகப் பந்துவீச்சில் பண்டியா, விஜய் ஷங்கர் என இருவருமே ஆல்-ரவுண்டர்கள்.

சுழற் பந்துவீச்சு எப்படி?
சுழற் பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் இந்த தொடரில் இடம் பெற்றனர். இருவரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்தனர். இருவரையும் ஒரே போட்டியில் ஆட வைப்பது நல்ல பலனை தரும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். சாஹல் 5 போட்டிகளில் 9 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 4 போட்டிகளில் 8 விக்கெட்களும் வீழ்த்தினர்.

ரோஹித் - தவான் என்ன செய்தார்கள்?
துவக்க வீரர்கள் ரோஹித், தவான் இருவரும் இந்த தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்து உள்ளனர். ரோஹித் மற்ற மூன்று போட்டிகளில் மிக மோசமாக சொதப்பினார். தவான் ஒரு போட்டியில் 28 ரன்கள் எடுத்தார். மற்ற இரண்டு போட்டிகளில் மிக மோசமான ரன்களையே எடுத்தார். 5 போட்டிகளில் ரோஹித் 169 ரன்களும், தவான் 188 ரன்களும் எடுத்தனர். இருவரும் நான்காம் மற்றும் ஐந்தாம் போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த போது, இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது. இதை தவிர்த்தால் இந்தியா பேட்டிங்கில் எப்போதும் கில்லி தான்.

மூன்றாவது இடம்
ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் கோலி தான் வழக்கமாக ஆடுவார். இந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து, இளம் வீரர் ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அவர் கடைசி இரண்டு போட்டிகளில் ஆடினார். எனினும், அவர் தன் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய கோலி ஒரு அரைசதம் அடித்து, 148 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டர் எப்படி?
4, 5 மற்றும் 6வது இடத்தில் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டனர். இதில் இருந்தே மிடில் ஆர்டரில் இந்தியா இன்னும் நிலையான வீரர்களை அடையாளம் காணவில்லை என தெரிந்தது. 4வது இடத்திற்கு அம்பதி ராயுடு ஓரளவு உறுதி ஆகிவிட்டார். இந்த தொடரில் 5 போட்டிகளில் 190 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

ஃபினிஷர் யார்?
ஐந்தாவது இடத்தில் இரண்டு போட்டிகளில் தோனியும், இரண்டு போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கும் ஆடினர். தோனியின் காயத்தால் தான் தினேஷ் கார்த்திக் ஐந்தாவது இடத்தில் ஆடினார். அதே போல ஆறாவது இடத்திற்கு கேதார் ஜாதவ் ஆடி வந்தாலும், ஐந்தாவது போட்டியில் அவருக்கு பதில் விஜய் ஷங்கர் களம் இறங்கினார். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கு தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் என அணியில் நான்கு வீரர்கள் ஆடியுள்ளார்கள்.

ஆல்-ரவுண்டர் செயல்பாடு
இந்த தொடரில் ஒரு நல்ல விஷயமாக இந்தியா மூன்று ஆல்-ரவுண்டர்களை ஐந்தாவது போட்டியில் போட்டியில் ஆட வைத்து ஆச்சரியம் அளித்தது. விஜய் ஷங்கர், பண்டியாவுக்கு மாற்றாக வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் சேர்ந்தார். அவர் பந்துவீச்சில் பெரிதாக செயல்படவில்லை என்றாலும், கடைசி போட்டியில் அணி தடுமாறிய போது பொறுப்பாக ஆடினார். கேதார் ஜாதவ் சுழற் பந்துவீச்சில் தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்துவதும், பேட்டிங்கில் கை கொடுப்பதும் அவரை முக்கிய ஆல்-ரவுண்டராக மாற்றியுள்ளது.

உலகக்கோப்பை அணி தயாரா?
நியூசிலாந்து தொடரின் முடிவில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தயாரா என்று கேட்டால் மிடில் ஆர்டரில் நிலையான கூட்டணி, முதல் மூன்று பேட்டிங் இடங்களுக்கு மாற்று வீரர்கள் என்ற சில விஷயங்களை தவிர கிட்டதட்ட இந்தியா உலகக்கோப்பைக்கு தயாராகவே உள்ளது.


Click it and Unblock the Notifications
