துபாய்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், சுனில் கவாஸ்கரை எச்சரித்துப் பேசியிருக்கிறார். இந்திய அணி சிறப்பாக ஆடுகிறது என்பதற்காக பாகிஸ்தான் அணியைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது, வார்த்தைகளை பேசுவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் இன்சமாம்.
இன்சமாம் உல் ஹக் இவ்வாறு சுனில் கவாஸ்கரை எச்சரித்துப் பேசுவதற்கு முக்கிய காரணம், சில நாட்களுக்கு முன்பு கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து பேசியது தான். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

அதற்கு முன் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால், பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. அப்போது பேசிய சுனில் கவாஸ்கர், "இந்திய பி அணியே நிச்சயமாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விடும், இந்தியா சி அணி பாகிஸ்தானை வீழ்த்துவது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்" என்று கூறி இருந்தார்.
பாகிஸ்தான் அணி தற்போது மிக மோசமாக இருப்பதை சுனில் கவாஸ்கர் இவ்வாறு சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் அதற்கு இன்சமாம் உல் ஹக் கடுமையாக பதிலடி கொடுத்துப் பேசி இருக்கிறார். இன்சமாம் இது பற்றி பேசுகையில், "கவாஸ்கர் அவர்கள் புள்ளி விவரங்களை பார்த்துவிட்டு பேச வேண்டும். அவர் மூத்தவர், கிரிக்கெட்டில் எங்களுக்கு முன் ஆடியவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் அணி நன்றாக ஆடி இருக்கிறது. உங்கள் அணியை புகழ்ந்து பேசுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் மற்ற நாட்டைப் பற்றி பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இதை நான் கடுமையான தொனியில் கூறுகிறேன்" என இன்சமாம் உல் ஹக் கூறியிருக்கிறார்.
இன்சமாம் உல் ஹக் புள்ளி விவரங்களை பார்த்து விட்டு பேசுமாறு கூறி இருக்கும் நிலையில், அதுவும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் கடந்த 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய மற்ற போட்டிகளை எல்லாம் இந்திய அணி வென்று இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் அணி சமீப காலமாக பல தொடர்களில் பெரிய தோல்விகளை சந்தித்து இருந்தது.