ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் ஆடினார். 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்ததோடு, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் புதிய சாதனை படைத்தார்.
கடந்த போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையை இரண்டே நாட்களில் இஷான் கிஷன் முறியடித்துள்ளார். இன்றைய போட்டியில் வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்த இஷான் கிஷன், நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேட் ஹென்றி வீசிய 6வது ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.

முதல் 6 ஓவர்கள் முடிவில் (பவர் பிளே) இஷான் கிஷன் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்திருந்தார். டி20 வரலாற்றில் பவர் பிளே ஓவர்களுக்குள் இந்திய வீரர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக 2025ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா 58 ரன்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.
சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
ஒருபுறம் இஷான் கிஷன் வெளுத்து வாங்கினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. கடந்த போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
துவக்க வீரர் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸர் அடித்த கையோடு, மேட் ஹென்றி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். சிவம் துபே 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இந்திய அணி 209 ரன்கள் இலக்கை 15.2 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.