மும்பை: நியூசிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சிஎஸ்கே அணிக்காக 2 சீசன்களில் விளையாடியுள்ள ஜேக்கப் ஓரம், நியூசிலாந்து அணியின் மிக முக்கிய ஜாம்பவான்களில் ஒருவர். இதனால் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அக்டோபர் 16 முதல் 20 வரை முதல் டெஸ்ட் போட்டியும், அக்டோபர் 24 முதல் 28 வரை 2வது டெஸ்ட் போட்டியும், நவம்பர் 1 முதல் 5 வரை 3வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்த டெஸ்ட் தொடர் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் நியூசிலாந்து அணி 3வது இடத்தில் உள்ளது. முதல் முறையாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், மீண்டும் அதற்கான பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி தீவிரமாக பல்வேறு விஷயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது. அதற்கான முதல் திட்டமாக நியூசிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக அந்த அணியின் ஜாம்பவான் ஜேக்கப் ஓரமை ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலேயே ஜேக்கப் ஓரம் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.
நியூசிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த ஷேன் ஜுர்கன்சன் கடந்த ஆண்டே பதவி விலகினார். அவரது இடம் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த சூழலில், தற்போது ஜேக்கப் ஓரம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 46 வயதாகும் ஜேக்கப் ஓரம் 11 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாடியவர்.
ஆல்ரவுண்டரான ஓரம், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகள், 160 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சுமார் 4 ஆயிரம் ரன்களும், 250 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். ஐபிஎல் தொடரின் முதல் 2 சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் போதுமான பங்களிப்பை அளித்துள்ளார்.
அதேபோல் 2022ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை தொடரின் போது மகளிர் அணியின் பயிற்சியாளராகவும் ஓரம் செயல்பட்டுள்ளார். இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னரே அவரை நியூசிலாந்து அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஓரம் பேசுகையில், மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நியூசிலாந்து அணிக்காக பணியாற்றுவது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். கடந்த சில மாதங்களாக நியூசிலாந்து அணியை கவனித்து வந்ததில், எதனை நோக்கி பணியாற்ற வேண்டும் என்பதை நன்றாக அறிவேன். நியூசிலாந்து பவுலிங்கில் ஏராளமான இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஆர்வமாக உள்ளது. அவர்களுடன் எனது அனுபவத்தை பகிர்ந்து சவாலை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.