IND vs NZ: வெற்றியை பக்கத்தில் தான் தவறவிட்டோம்.. அடுத்த போட்டியில் பாருங்க- மைக்கேல் பிரஸ்வேல் கருத்து
மும்பை: இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த போதிலும், நியூசிலாந்து அணிக்கு பல பாசிட்டிவ் விஷயங்கள் கிடைத்துள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் உலகச் சாம்பியனான இந்திய அணிக்கு நியூசிலாந்து கடுமையான சவாலை அளித்தது. முதல் போட்டியில் 226 ரன்கள் என்ற சாதனையை இந்தியா சேஸ் செய்த நிலையில், இரண்டாவது போட்டியில் 181 ரன்களைத் தற்காத்து விளையாடிய நியூசிலாந்தை இந்தியா கடைசி நேரத்தில் வீழ்த்தியது.

போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைக்கேல் பிரேஸ்வெல், "இதுவரை இந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலுமே நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், போட்டிகளின் முடிவுகள் மிகவும் நெருக்கமாகவே இருந்தன. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, வெலிங்டன் போட்டியில் சிறப்பாகச் செயல்பட இலக்கு வைத்துள்ளோம்" என்று கூறினார்.
"சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியை எதிர்கொள்ளும்போது, ஆட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் நாம் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் பெரும்பாலான நேரங்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். ஆனால், போட்டி முழுவதையும் முழுமையான கட்டுப்பாட்டுடன் முடிப்பதே தற்போதைய தேவை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் நாங்கள் நன்றாகச் செய்த காரியங்களை மேலும் சிறிது நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும்" என்றார்.
போட்டியில் எந்தெந்த இடங்களில் தவறு நடந்தது என்பதைப் பற்றிப் பேசிய பிரேஸ்வெல், இந்திய பேட்டர்கள் கடைசி ஓவர்களில் தங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, இரண்டாவது டி20 போட்டியில் 14-வது ஓவரின் கடைசிப் பந்தில் நமன் திர் அடித்த சிக்ஸர், ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பிய முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
"டி20 கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடைவெளிகள் மிகச் சிறியவை. எனது பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸர், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த வீரரின் தலைக்கு சற்று மேலாகச் சென்றது. அது சற்று பிசகியிருந்தால் விக்கெட்டாக மாறியிருக்கக் கூடும். இத்தகைய சிறிய தருணங்கள் இதுவரை இந்தியாவிற்கு சாதகமாக அமைந்து, அவர்களுக்கான சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன" என்று அவர் விளக்கித் கூறினார்.
தொடரில் நீடிப்பதற்கு இந்த 3-வது போட்டி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஒன்று என்பதை நினைவுகூர்ந்த பிரேஸ்வெல், அணியின் மனநிலை நேர்மறையாக இருப்பதாகவும், வீரர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


