புனே: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வலைப் பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உதவும் வகையில் பந்து வீசியது கவனத்தை ஈர்த்துள்ளது. மோர்னே மோர்கல் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் வேண்டாம் என பிசிசிஐ முதலில் நினைத்தது. ஆனால், இப்போது அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமின்றி, பேட்ஸ்மேன்களுக்கும் உதவி வருகிறார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர்களை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி 54 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்து வீசினர். அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களின் உயரம் தான். இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் டிம் சவுத்தி, மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்க் ஆகிய மூன்று பேரும் ஆறு அடிக்கும் அதிக உயரத்தை கொண்டவர்கள்.
அதிலும் வில்லியம் ஓரூர்க் அதிக உயரமாக இருப்பதுடன், பந்தை நன்றாக ஸ்விங் செய்யும் ஆற்றல் உடையவர். அதனால் இவர்கள் மூவரையும் சமாளிக்க வலைப்பயிற்சியில் உயரமான பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்கள் விரும்பினர். பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவில் மாநில அளவில் விளையாடி வரும் உள்ளூர் வீரர்களில் உயரமான வேகப் பந்துவீச்சாளர்களை அழைத்து பந்து வீச சொல்வார்கள்.
அதை தவிர்த்து த்ரோ டவுன் மூலமும் இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்வார்கள். ஆனால், இது எந்த வகையிலும் சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு பந்துவீச்சாளர் வீசும் பந்தை சந்திப்பதற்கு இணையாகாது. இந்த நிலையில்தான் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவர்கள் தானே களத்தில் இறங்கி இருக்கிறார்.
6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட மோர்னே மோர்கல், தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருந்தவர். இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசினார். அவரது பந்தை சந்திப்பது சிரமம் என்பதால் அதை எதிர் கொண்டு பயிற்சி மேற்கொள்ள இந்திய வீரர்களும் ஆர்வத்துடன் இருந்தனர்.
மோர்னே மோர்கலை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கும் முன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவையா? என தயக்கத்தில் இருந்தது. பின்னர் கம்பீரின் பிடிவாதத்தால் அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அது ஒரு வகையில் தற்போது இந்திய அணிக்கு உதவியாகவும் அமைந்து உள்ளது.