புனே: புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் அதிரடி பேட்டிங்கை எதிர்பார்க்கவில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்ற நியூசிலாந்து அணி தொடரை 2 - 0 என கைப்பற்றி இருக்கிறது.
புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக பந்து வீசி இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து நிர்ணயித்திருந்தது. இந்திய அணி நிதானமாக அந்த இலக்கை எட்ட முயற்சிக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

ஏனெனில், இந்தப் போட்டியில் அப்போது இரண்டரை நாட்கள் மீதம் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். எனினும், நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை 245 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றிக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அதிரடியாக பேட்டிங் ஆடும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார். இது பற்றி அவர் பேசுகையில், "இந்தியா நிச்சயமாக நான்காவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடும் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி அதிரடியாக ஆடுவார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனினும், இடையே நாங்கள் விக்கெட்களை வீழ்த்தி அதை சமாளித்தோம். கடைசி இரண்டு விக்கெட் வீழ்த்த நீண்ட நேரம் ஆனது. ஆனால், நாங்கள் வென்றதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி." என்றார்.
டாம் லாதம் டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றி பேசுகையில், "இது நிச்சயம் சிறப்பான தருணம். இந்த இடத்தில் இருப்பதற்கு பெருமையாக உள்ளது. எங்கள் ஒட்டுமொத்த அணியின் வெற்றி இது. அனைவரும் தங்கள் பங்களிப்பை செய்து இருக்கின்றனர். இந்தியாவுக்கு வந்தால் நீங்கள் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும் போது அதிக ரன்களை குவிக்க வேண்டும். மிட்செல் சான்ட்னர் எங்களுடன் நீண்ட காலமாக இருக்கிறார். ஆனால், போதிய வாய்ப்பின்றி இருந்தார். இப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்." என்றார்.