புனே: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்றதை அடுத்து அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது வரலாற்று வெற்றி என அவர் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். இந்திய மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் எந்த அணியும் செய்ய முடியாத சாதனையை நியூசிலாந்து அணி செய்து இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. அதன் பின் இந்திய அணி இந்திய மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று அதில் ஒரு தொடரில் கூட தோல்வி அடையாமல் இருந்தது. 4331 நாட்களாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இருந்தது.

மறுபுறம், நியூசிலாந்து அணி கடந்த காலத்தில் இந்தியாவில் மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்று இருந்தது. மேலும், தற்போதைய டெஸ்ட் தொடருக்கு முன் இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்து இருந்தது.
இப்படி பல்வேறு பின்னடைவுகள் இருந்தாலும் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு ஆடி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. இது மாபெரும் வரலாற்று நிகழ்வு ஆகும்.
மேலும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து வென்ற பின் ஒரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரைக் கூட வெல்லவில்லை. அந்த மோசமான சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து உலகின் முன்னணி டெஸ்ட் அணியாக இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது நியூசிலாந்து.
இதை அடுத்து தான் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "நியூசிலாந்து அணி மாபெரும் விஷயத்தை செய்து இருக்கிறது. பிரபலமான, வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துக்கள்" எனக் கூறி இருக்கிறார் கிறிஸ்டோபர் லக்சான்.