புனே: 69 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை செய்து இருக்கிறது. 69 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஆடியது. 1955 இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.
அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது நியூசிலாந்து. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 - 0 என தொடரை கைப்பற்றி இருக்கிறது நியூசிலாந்து அணி.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. புனேவில் கிடைத்த இந்த வெற்றியே நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் பெரும் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது இந்தியா. வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை.
அந்த பிரம்மாண்ட சாதனையை இந்திய அணி படைத்து அதை தொடர நினைத்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது நியூசிலாந்து. மேலும், இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆறாவது அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து பெற்று இருக்கிறது.