மும்பை: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி தற்போது ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணிக்கு திரும்பியிருந்தார்.

இந்த சூழலில் முதலில் களமிறங்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் கான்வே அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என ஒன்பது பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் டிம் செபர்ட் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது வீரராக விளையாடிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திராவும் வழக்கத்துக்கு மாறாக இன்று அதிரடி காட்டினார்.
நான்கு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என பறக்க விட்ட அவர் 26 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் கிலன் பிலிப்ஸ் 13 பந்துகளில் 19 ரன்களும், டேரல் மிட்செல் 11 பந்துகளில் 18 ரன்களும் சேர்க்க மார்க் சாப்மண் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் குறைய தொடங்கிய நிலையில் கேப்டன் ஜாக் போக்ஸ் இறுதிக்கட்டத்தில் 27 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதேபோன்று தற்போது சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கும் ஜாக்போக்ஸும் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 17 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. குல்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் தடுமாறினர். குறிப்பாக அர்ஸ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் 35 ரன்கள் கொடுத்தார். சிவம் துபே ஒரு ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ஆனால் அவருக்கு இன்னொரு ஓவரை கேப்டன் சூரியகுமார் தரவில்லை.