முகமது ஷமி இல்ல.. 5 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்த பிசிசிஐ
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 வரை விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்பதால், பிசிசிஐ இதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி நிர்வாகம் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனினும், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தற்போது காயம் காரணமாக அணியில் இல்லை.

இளம் வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்றாலும், இந்தியா ஏ மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது சிறப்பான செயல்பாடு அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு இந்தத் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. இந்தியாவின் சார்பாக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி, நியூசிலாந்து மண்ணிலும் 4 டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து நல்ல சாதனையைக் கொண்டுள்ளார். இருப்பினும், அவர் தற்போதைய அணி நிர்வாகத்தின் திட்டங்களில் இல்லை என்று கூறப்படுகிறது.
தேர்வுக்குழுவினர் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதால், ஷமி அணியில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிகிறது. தலைமைத் தேர்வுக்குழு உறுப்பினர் அஜித் அகர்கர், ஷமியின் தற்போதைய உடற்தகுதி டி20 போட்டிகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்றும், அணியின் எதிர்கால திட்டங்களில் அவர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபிக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. 2025-26 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது நியூசிலாந்து தொடருக்கான திட்டங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கடைசியாக 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடிய போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. மேலும், சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications

