மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிசிசிஐ தேர்வுக் குழுவிற்கும், அணியின் நிர்வாகத்திற்கும் (பயிற்சியாளர் மற்றும் கேப்டன்) இடையே சரியான புரிதல் இல்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி கையாளப்படும் விதம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ள கேள்விகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒரு திசையிலும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு வேறொரு திசையிலும் பயணிப்பதாகத் தெரிகிறது.

22 வயதான இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஹர்திக் பாண்டியாவுக்குச் சரியான மாற்று இவர்தான் என்று அனைவரும் கொண்டாடினர். ஆனால், அதன் பிறகு அணியில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு எதிராக உள்ளன.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் "தேர்வுக்குழுவிற்கும், பயிற்சி குழுவிற்கும் இடையே ஒத்திசைவு இருக்கிறதா இல்லையா? நிதிஷ் ரெட்டி விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் அவரைத் தேர்வுக்குழு அணியில் சேர்க்கிறது. ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அப்படியே அரிதாக வாய்ப்பு கிடைத்தாலும், அவருக்குப் பேட்டிங் கிடைப்பதில்லை; பந்துவீசவும் மிகக் குறைவான ஓவர்களே வழங்கப்படுகின்றன. இது என்ன மாதிரியான அணுகுமுறை?" என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "தென் ஆப்பிரிக்கா தொடரில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஹர்திக் பாண்டியா காயமடைந்தால், எதிர்காலத்திற்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்று தேர்வுக்குழு நினைக்கிறது. அதனால் தான் நிதிஷ் ரெட்டி தொடர்ந்து அணியில் இருக்கிறார். ஆனால், பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் கில்லும் அதே கோணத்தில் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் நிதிஷ் ரெட்டியை முழுமையாக நம்பவில்லை" என்று கூறியுள்ளார்.
"வெறுமனே அணியில் எடுத்துவிட்டு, பெஞ்சில் உட்கார வைப்பதால் யாருக்கு என்ன லாபம்? அவருக்குப் போட்டியிலும் வாய்ப்பு தருவதில்லை. இதற்குப் பதிலாக அவரை விடுவித்து, விஜய் ஹசாரே ட்ராபியில் விளையாட அனுமதியுங்கள். அங்காவது அவர் பேட்டிங், பவுலிங் செய்து தன் திறமையை வளர்த்துக் கொள்வார்" என்று சோப்ரா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக இந்திய அணியின் திட்டங்களில் நிதிஷ் ரெட்டி முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆனால், இதுவரை அவர் மிகக் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 4 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.
ஹர்திக் பாண்டியா இல்லாத போட்டிகளில் கூட இவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்குழுவின் விருப்பமும், கம்பீரின் திட்டமும் வெவ்வேறாக இருப்பது அணியின் எதிர்காலத்திற்கு நல்லதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.