மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவருக்கு அணியின் துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது தேர்வில் பிசிசிஐ ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் விளையாடுவது இன்னும் 100 சதவீதம் உறுதியாகவில்லை. பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஸ்ரேயாஸ் ஐயரின் பெயருக்குக் கீழே "உடற்தகுதிக்கு உட்பட்டது" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவக் குழுவிடமிருந்து அவர் முழுமையான உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அவர் போட்டிகளில் களமிறங்க அனுமதிக்கப்படுவார். அவர் அணியில் இருந்தாலும், இன்னும் முழுமையான 'க்ரீன் சிக்னல்' கிடைக்கவில்லை என்பதுதான் அந்தச் சிக்கல்.
சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு மண்ணீரல் கழிவு ஏற்பட்டது. உயிருக்கு அபாயமான நிலையில் இருந்து மீண்டு வந்த அவர் இப்போது தான் மீண்டும் போட்டிகளில் ஆடத் துவங்கி இருக்கிறார். எனவே, அவர் 50 ஓவர் போட்டிகளுக்கான உடற்தகுதியை பெற்று விட்டதாக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு முன்னதாக ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டதால் ஸ்ரேயாஸ் ஐயரின் தேர்வு இன்னும் 100 சதவீதம் உறுதியாகவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை, மற்ற இரண்டு இளம் வீரர்களின் வாய்ப்பைப் பறித்துள்ளது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டதால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஒருவேளை கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரால் தனது உடற்தகுதியை நிரூபிக்க முடியாமல், அவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலிருந்து விலக நேரிட்டால், நீக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட வாய்ப்புள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.