புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் நிலை என்ன? புனே பிட்ச் யாருக்கு சாதகமாக இருக்கிறது? என்பது பற்றி பார்க்கலாம்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் நிலையில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து இருக்கிறது. அதனால், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சில் தான் இந்திய அணியின் வெற்றி அடங்கி இருக்கிறது.

முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச் முற்றிலும் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தது. பெங்களூரில் நடந்த அந்த போட்டிக்கான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்க்காததால் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். இந்த நிலையில், புனே போட்டிக்கான பிட்ச் முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதன் பின் படிப்படியாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். குறிப்பாக மூன்றாவது நாளில் இருந்து சுழற் பந்துவீச்சாளர்கள் பிட்ச்சை பயன்படுத்தி விக்கெட்களை வீழ்த்துவது எளிதாக இருக்கும். எனவே, இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். பெங்களூருவிலும் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. அது இந்திய அணிக்கு வினையாகவும் மாறி இருந்தது.
ஆனால், இந்த முறை புனேவில் அப்படி நடக்காது. ஏனெனில், பெங்களூருவில் போட்டிக்கு முன் மூன்று நாட்கள் மழை பெய்தது. அதனால், அந்த பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. ஆனால் புனேவில் அதுபோன்ற சூழ்நிலை எதுவும் இருக்காது. மேலும், போட்டி நடக்கும் ஐந்து நாட்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.
ஆனால், ஒரு சிக்கல் மட்டும் உள்ளது. ஒருவேளை நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில், முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமான சூழல் இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவிக்கக் கூடும். எனவே, டாஸ் வெற்றியும் முக்கிய பங்கை வகிக்க உள்ளது.