மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கான போட்டி கடுமையாக இருக்கிறது. தகுதியான வீரர்கள் தேவையின்றி பெஞ்சில் அமர்த்தப்படும்போது, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் அதிருப்தி எழுந்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடாததைக் கண்டு, இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அர்ஷ்தீப் தொடரின் கடைசிப் போட்டியில் ஆடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருக்க வேண்டும் என்பது அஷ்வினின் கருத்தாக உள்ளது. அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து பேசிய இந்திய அணி நிர்வாகம், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவருக்கும் போட்டி அனுபவம் தேவை பதிலளித்தது.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின் "இது பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டி. தென் ஆப்பிரிக்கா போன்ற களங்களுக்கு, பந்தை தரையில் குத்தி எகிறவைக்கும் பந்துவீச்சாளர்கள் தேவை. பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா இருவருக்கும் போட்டி அனுபவம் தேவை என்பதால், அணி நிர்வாகத்தின் யோசனையைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், அர்ஷ்தீப் சிங் பற்றி யாரும் சிந்திப்பதில்லை, யார் அவரது நிலைப்பாட்டில் நின்று யோசிப்பார்கள்? அவர் எவ்வளவு ஆடியிருக்கிறார் அல்லது ஆடவில்லை என்பது இங்கு முக்கியமில்லை."
அவர் மேலும், "இப்போது அவன் என்ன நினைப்பான்? இவ்வளவுதான் செய்தும், தன்னுடைய இடத்திற்காக அவன் இன்னும் போராடுகிறான். அடுத்த முறை அவன் விளையாடும்போது, தொய்வுடன் இருப்பான். நீங்கள் என்ன சொன்னாலும், இது தன்னம்பிக்கையின் விளையாட்டு. ஏன் இது பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே எப்போதும் நடக்கிறது? பேட்ஸ்மேன்களுக்கு ஒருபோதும் இது நடப்பதில்லை," என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக அர்ஷ்தீப்பை நியூசிலாந்து தொடரின் முதல் இரு போட்டிகளில் ஓய்வில் வைத்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து, டி20 வடிவத்தில் அர்ஷ்தீப் இந்தியாவின் பிளேயிங் லெவனில் இருந்து தொடர்ந்து இடம்பெறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
அர்ஷ்தீப் சிங்கின் நிலை குறித்துப் பேசும்போது, அஷ்வின் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்தார். "நான் இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன், அதனால் இது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அர்ஷ்தீப் சிங்கிற்காகப் போராடுகிறேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தலைநிமிர்ந்து களமிறங்க அவர் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு அவர் தகுதியானவர்," என்று வலியுறுத்தினார்.
"இப்போது அவன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவான் என்று சொல்கிறார்கள். இதில் என்ன பயன்? முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் ஏன் அவன் விளையாடவில்லை? இது அவனது தன்னம்பிக்கைக்கு என்ன செய்யும்?" என்றும் அஷ்வின் கேள்வி எழுப்பினார்.